
போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றன. மேலும், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்களுடன் அடுத்தடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அந்த வகையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
ஏஐடியூசி உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக டிஜிட்டல் ரேஷன் கடைகள் தொடக்கம்!
இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வருகிற 21ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.” என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடந்தது. 15ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து 14 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. காலி பணியிடங்கள் நிரப்புவது, வாரிசுகளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை தமிழ்நாடு அரசு பழிவாங்குகிறது.” எனவும் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்தார்.