
கோயம்புத்தூர்
"அரசு சாரா மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முதுகலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், அரசு சாரா மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது: "முதுகலை மருத்துவ மாணவர்களாகிய நாங்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சர்வீஸ் மருத்துவர்கள் என்ற அடிப்படையில் மூன்று வருடங்களாக பயிற்சிப் பெற்று வருகிறோம்.
இந்தப் பயிற்சிக்கு முன்பு நாங்கள் இரண்டு ஆண்டுகள் தாலுகா மருத்துவமனைகளில் கிராமப்புற சேவை செய்துவிட்டு வந்துள்ளோம். இந்த பயிற்சிகள் முடிந்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு, காலியாக உள்ள இடங்களில் எங்களுக்கு மருத்துவராக பணி ஆணை வழங்கப்படும். இந்த நடைமுறைதான் தற்போது வரை இருந்து வந்தது.
இதை மாற்றி மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) கடந்த 17 மற்றும் 18–ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடத்தி பிற மாநிலம் மற்றும் பிற மருத்துவ கல்லூரிகளில் படித்த அரசு சாரா மருத்துவர்கள் 560 பேருக்கு நேரடியாக அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தாலுகா மருத்துவமனைகளிலும் பணியாற்ற பணி நியமன ஆணையை வழங்கி உள்ளது.
மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் இந்த செயல் இரண்டு ஆண்டுகள் கிராமப்புற சேவைகளை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு முரண்பாடாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
புதிய மருத்துவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இருக்காது. தற்போது மக்களிடையே பரவும் நோய்கள் குறித்தும் அவர்களுக்கு தெரியாது.
எனவே, இதுபோன்று நேர்முகத் தேர்வு என்ற பெயரில் பணி நியமனம் செய்யும் நிலையை மாற்ற வேண்டும். இதுவரை நடைமுறையில் இருந்துவரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கும், அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையால் அனுபவம் வாய்ந்த சீனியர் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும் காலிப் பணியிடங்கள் பாதிக்கப்படுகிறது. அப்படியே எங்களுக்கு பணி ஆணை கிடைத்தாலும் எங்களுக்கு அரசு மருத்துவமனையில் பணி கிடைக்காது. இதனால் நாங்கள் மீண்டும் தாலுகா மருத்துவமனைகளுக்கே செல்லும் நிலை உள்ளது. அங்கு உயர் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், நாங்கள் மூன்று ஆண்டு பெற்ற பயிற்சி வீணாகும் நிலை உள்ளது.
இதனால் நகர்புற மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, அனுபவம் இல்லாத மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும். முரண்பாடான இந்த பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதிதாக கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்கள் கோரிக்கைக்கு நீதி கிடைக்காவிட்டால் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.