ரூ.32 இலட்சம் மதிப்பில் போடப்பட்ட தார்ச்சாலை இரண்டே மாதத்தில் சேதம்; ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

First Published Nov 30, 2017, 9:28 AM IST
Highlights
Damage of Rs.32 lakhs worth Request to take action on contractor ...


அரியலூர்

அரியலூரில் ரூ.32 இலட்சம் மதிப்பில் போடப்பட்ட தார்ச்சாலை இரண்டே மாதங்களில் சேதமடைந்துள்ளதால்  சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட இணைச் செயலாளர் கோரிக்கை விடுத்தார்.


அரியலூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இலட்சுமி பிரியா தலைமைத் தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் வந்திருந்தனர்.

இதில், வாரணவாசியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் பங்கேற்று பேசியது:

"செந்துறை ஒன்றிய பகுதியில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கப்பட்ட விதை நெல்லில் கலப்படம் உள்ளது. இதனால் இதனை விளைவித்த விவசாயிகளுக்கு மன உளைச்சல் மற்றும் காலவிரயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

டெல்டா பகுதிக்கு மும்முனை மின்சாரம் 10 மணி நேரம் வழங்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க காலதாமதம் ஆகிறது. ஆகவே, ஆட்சியர் உடனடியாக கடன் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

ஆண்டிமடம் ஒன்றியம் கல்லாத்தூரில் தொகுப்பு வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட இணைச் செயலாளர் பெ.பிச்சப்பிள்ளை பேசியது:

"கந்து வட்டி சம்பந்தமாக அரியலூர் நகரத்தில் அரசு அங்கீகாரம் இல்லாமல் நிதிநிறுவனம் நடத்தி வரும் நபர்களின் விவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிகொண்டான் சேனாதிபதி வரை ரூ.32 இலட்சம் மதிப்பில் போடப்பட்ட தார்ச்சாலை இரண்டு மாதங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. ஆகவே, சாலை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் மல்லூர் முதல் பொய்யூர் வரை போடப்பட்ட சாலையும் சேதமடைந்து உள்ளது. பயிர் காப்பீடு ரூ.8.80 கோடி கிடைக்க நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாவட்ட தலைவர் பாண்டியன், விவசாயி ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்து கலெக்டர் லட்சுமி பிரியா பதில் அளித்தார்.

click me!