
ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து செய்யப்படும் என சென்னையில் ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் எச்சரித்துள்ளார். சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான புறநகர் ரயில் கடந்த வாரம் மின்கம்பி அறுந்து விழுந்ததால், விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே ரயில் தாமதமாக வந்ததால் வேலைக்கு செல்வோர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் தொங்கியபடி சென்றனர்.
திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பரங்கிமலை ரயில் நிலையத்தை கடக்கும்போது பக்கவாட்டு சுவரில் படிக்கட்டில் தொங்கியவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அதில் யில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் பாஸ் ரத்து செய்யப்படும் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்ய வேண்டாம் என 700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதுவரை நடத்தப்பட்டன. ஆனாலும் பரங்கிமலையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார்.