
விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதை மனைவிக்கு போன் செய்து தகவல் அளித்த கணவன் உயிரிழந்த சம்பவம் அரியலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் மேலகுப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் பேக்கரி நடத்தி வந்தார்.
பல கிராமங்களில் உள்ள கடைகளுக்கு பைக்கில் சென்று கடைகளுக்கு பிற்பனையும் செய்து வந்துள்ளார் சுரேஷ். பேக்கரி தொழிலுக்காக இவர், கடன் வாங்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக சுரேஷ் கடும் மன உளைச்சளில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை ஆண்டிமடம் பகுதிக்கு, செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வியாபார விஷயமாக காலையில் சென்ற சுரேஷ், அழகாபுரம் அருகே இருந்து கொண்டு மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது, தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட சுரேஷின் மனைவி பதறியுள்ளார்.
சுரேஷ் விஷம் குடித்ததால் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள், அவரை, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும், சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்த நிலையில், பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த சுரேஷின் மனைவி கண்ணீர் விட்டு அழுதார். இது குறித்து சுரேஷின் தந்தை கோவிந்தராசு, ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன் மகன் சுரேஷ் கடன் தொல்லையால்தான் இறந்திருக்கிறான் என்று புகாரில் கூறியுள்ளார். கோவிந்தராசுவின் புகாரைப் பெற்ற போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.