
பெரம்பலூர்
மக்களின் பலநாள் கோரிக்கைக்கு செவிசாய்த்து பெரம்பலூரில் பல மாதங்களாக செயல்படாமலிருந்த சிக்னல்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவலாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நகரில் புகர் பேருந்து நிலையம், பாலக்கரை, ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, கனரா வங்கி சாலை, காமராஜர் வளைவு உள்ளிட்ட இடங்களில் பல இலட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்களை முறையாக பராமரிக்காததால் அவை பழுதடைந்தன.
மேலும், மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து காவலாளர்களும் இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். மேலும், இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தலிடம் வலியுறுத்தப்பட்டன.
இந்த நிலையில், ரோவர் வளைவு பகுதியில் உள்ள தானியங்கி சிக்னல் பழுது நீக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட தொடங்கியது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு அமைக்கப்பட்டு போக்குவரத்து காவலாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால், சிக்னகளில் அனைத்து வாகனகளும் முறையாக நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு வாகன ஓட்டிகளும், மக்களும் சிரமம் இன்றி சாலையைக் கடந்து செல்கின்றனர்.