
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டு சென்ற கப்பல், எதிரே கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்த கப்பல் மீது மோதியது. இதில் கப்பலில் விரிசல் ஏற்பட்டு, அதில் இருந்த கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது.
கடலில் கலந்த கச்சா எண்ணெய்யால் மீன்கள், ஆமைகள் செத்து கரை ஒதுங்குகின்றன. மேலும் கடலில் படிந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணியில் மாநகரட்சி, கடலோர காவல்படை இணைந்து சுமார் 1500 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கரைக்கால் பகுதியில் உள்ள கடலில் ரசாயன கழிவுநீரில் கடலில் கலந்துவிடுவதால், மீன்களும், ஆமைகளும் செத்து கரை ஒதுங்குகின்றன.
கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றான ஆமைகளில் பலவகைகள் உள்ளன. ஆழ் கடல் பகுதிகளில் வசிக்கும் ஆமைகள், முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதிகளவில் காரைக்கால் கடற்கரையை நோக்கி வருவது வழக்கம்.
அதுபோன்று, கரைக்கு வரும் ஆமைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் கடற்கரை மணலில் பள்ளம் தோண்டி, அதில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு மணலை மூடிவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும்.
பின்னர், குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர், அந்த முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியாகி அவையும் கடலுக்குள் சென்று விடும்.
முட்டையிடுவதற்காக ஆமைகள் கரையை நோக்கி வரும்போது மீன்பிடி விசைப்படகு மற்றும் கப்பல்களின் மோட்டார் மற்றும் பேன்களில் (fan) சிக்கி காயமடைந்த நிலையில் செத்து கரை ஒதுங்கும்.
ஆனால் தற்போது காரைக்கால் கருக்களாச்சேரி கடற்கரையில் சிறியதும், பெரியதுமான அளவில் 30க்கு மேற்பட்ட ஆமைகள் காயம் இல்லாமல் செத்து கிடக்கின்றன.
இதற்கு காரணம், காரைக்கால் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், கடலில் சென்று கலப்பது என்றும், இதனால், கடல்நீர் மாசுபட்டு ஆமைகள் இறந்திருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் கடல் வாழ் ஆமைகள், காரைக்கால் மாவட்ட கடலோர பகுதிகளில் செத்து கரை ஒதுங்குவதை தடுக்கும் வகையில் ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.