
தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-
அரவக்குறிச்சி தொகுதியில் 97,100 ஆண், 1,03246 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,00347 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் 157 இடங்களில் 245 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 96 வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு இணையதள கேமிரா மூலம் நேரடியாக ஒளிபரப்பாகும். மற்ற 149 வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு விடியோ மூலம் படம் பிடிக்கப்படும்.
அரவக்குறிச்சியில் 1,188 வாக்குச்சாவடி அலுவலர்களும், 294 தேர்தல் நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்காக 245 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 735 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தொடர்பாக 35 புகார்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவோ, கைது நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. அரவக்குறிச்சியில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 28 பேர் சுயேச்சைகள்.
தஞ்சாவூரில் மொத்தம் 2,68, 516 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,30,146 ஆண்கள், 1,38,352 பெண்கள், 18 பேர் 3ம் பாலினத்தவர்கள். இந்த தொகுதியில் 88 இடங்களில் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 275 வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு இணையதள கேமரா மூலம் நேரடியாக ஒளிபரப்பாகும். மீதி ஒரு வாக்குச்சாவடியில் நடக்கும் வாக்குப்பதிவு விடியோ மூலம் படம் பிடிக்கப்படும்.
தஞ்சாவூரில் 1,476 வாக்குச்சாவடி அலுவலர்களும், 331 தேர்தல் நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பதிவுக்காக 276 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், அதே எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
அந்த தொகுதியில் தேர்தல் தொடர்பாக 14 புகார்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் போட்டியிடும் 14 வேட்பாளர்களில் 7 பேர் சுயேச்சைகள்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 1,42,329 ஆண், 1,43,629 பெண், 22 பேர் 3 பாலினத்தவர்கள் என மொத்தம் 2,85,980 வாக்காளர்கள் உள்ளனர்.
அந்த தொகுதியில் 97 இடங்களில் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 254 வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு இணையதள கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு நேரடி ஒளிபரப்பாகும். மற்ற 37 வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு விடியோ மூலம் படம்பிடிக்கப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 1,396 வாக்குச்சாவடி அலுவலர்கள், 349 தேர்தல் நுண் பார்வையாளர்கள் உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குப்பதிவுக்காக 291 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 582 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
அந்த தொகுதியில் தேர்தல் தொடர்பாக 76 புகார்கள் வந்தன. அதன்படி 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் 28 வேட்பாளர்களில் 20 பேர் சுயேச்சைகள்.
இவ்வாறு அவர் கூறினார்.