
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளிகள் இன்று திறக்கப்பட்டவுடனேயே. மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21 -ஆம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததது.
ஆனால், கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
இதனையொட்டி முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் மேற்கொண்டனர்.
தனியார் பள்ளிகளின் வாகனங்கள், மற்றும் பள்ளிகளை கல்வி மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இன்று பள்ளிகள் திறக்கப்பட்டவுடனேயே மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
ஒரு வாரத்தில் மாணவ, மாணவிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றை விநியோகிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 12 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் திருவிழாக்கள் காரணமாக நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன..
நீண்ட நாள் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர்.