
புயலுக்கு வாய்ப்பு :
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (21-ம் தேதி) முதல்24-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது, வடக்கு திசையில் அந்தமான் நிகோபார் தீவு வழியாக நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக, அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (21-ம் தேதி) மணிக்கு 85 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசும். நாளை (22-ம் தேதி) மத்திய கிழக்கு வங்கக்கடல், மியான்மர் கடலோரப் பகுதியில் 80 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசும். வடக்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கதேச கடலோரப் பகுதியில் பலத்தகாற்று வீசக்கூடும்.
சென்னை - வானிலை :
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் , கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.