தமிழகத்தில் இன்று பலத்த மழை - அந்தமான் அருகே புதிய மேலடுக்கு சுழற்சி

First Published Dec 4, 2016, 12:28 PM IST
Highlights


அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழை இல்லை. வடகிழக்கு பருவமழை பொய்த்து விடுமோ? என விவசாயிகள் கவலை அடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி, புயலாக மாறியது.

‘நாடா’ என்று பெயரிடப்பட்ட அந்த புயல் பின்னர் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன்தினம் அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. இதனால் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் மழை பெய்லாம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறினார்.

இந்நிலையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. இந்த மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து புயலாக மாறினால் அதற்கு ‘வார்டா’ என்று பெயர் சூட்டப்படும். மேலும் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் பட்சத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து ஸ்டெல்லா கூறுகையில், அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மேலடுக்கு சுழற்றி தற்போது தமிழகத்தில் இருந்து 1,500 கி.மீ. தொலைவில் உள்ளதாகவும், அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.

click me!