துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு மைதானத்துக்கு வரும் வீரர்கள்... காக்கிகளால் அதிரும் சேப்பாக்கம்!

First Published Apr 10, 2018, 10:39 AM IST
Highlights
today gunned police protection for cricket players


தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகமே போராட்டகளத்தில் இறங்கியுள்ள இந்த நேரத்தில்  இன்று மாலை சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களை கமாண்டோ படையோடு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்போடு மைதானத்துக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களாம்.

ஐபிஎல் போட்டியில் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க இதுவரை சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். செப்பாக்கா மைதானமே காக்கிகளால் நிரம்பிக் காணப்படுகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு, போராட்டங்கள் அமைதி வழியில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே காவிரி உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அனைவரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று வேல்முருகன், தமிமுன் அன்சாரி, தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

எதிர்ப்புகளை மீறி ஐபிஎல் போட்டி நடத்தினால் ஸ்டேடியத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை சிறைபிடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திற்கள் ரசிகர்கள் கருப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும் என்றும் சில ஆலோசனைகள் கூறப்பட்ட நிலையில் ஸ்டேடியத்திற்குள் செல்ல ரசிகர்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 



#மைதானத்துக்கு செல்லும் ரசிகர்கள், செல்போன், தண்ணீர் பாட்டில், கொடி, பதாகைகள், பீடி, சிகரெட், கண்ணாடிகள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லக் கூடாது.

#இசைக்கருவிகள், கார் சாவி, பைனாகுலர், பட்டாசுகள், கேமரா, ரேடியோ, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#ஸ்டேடியத்திற்குள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லக் கூடாது.

#பேனர்களைக் கொண்டு செல்ல தடை.

எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள், வெளிஉணவு, தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டள்ளது.

மேலும் ரசிகர்களை கண்காணிக்க ரகசிய கேமிரா பொருத்தப் பட்டுள்ளது, ஸ்டேடியம் மற்றும் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் என மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளார்கள். 

அதேபோல சென்னையில் கிரிக்கெட் வீரர்கள் வெளியே ஷாப்பிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கி உள்ள கிரவுன் பிளாசா ஓட்டல் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நேற்று கூட பயிற்சிக்காக வீரர்கள் தனித்தனி காரில் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டேடியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

இந்நிலையில் இன்று மாலை ஐபிஎல் போட்டிக்காக ஓட்டலில் இருந்து கிரிக்கெட் வீரர்களை பாதுகாப்பாக தனித்தனி காரில் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து செல்லலாமா அல்லது வீரர்களுக்கான பேருந்துகளிலேயே பாதுகாப்பாக அழைத்து செல்வதா என்று கிரிக்கெட் வாரியம் காவல்துறையினருடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.

click me!