தேர்வில் தோல்வியடைந்து விடுமோ என்ற பயத்தில் பிளஸ் -2 மாணவி தீக்குளித்து தற்கொலை...

First Published Apr 10, 2018, 9:42 AM IST
Highlights
Plus-2 student fires suicide in fear of failure


காஞ்சீபுரம் 

தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பொலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. கூலி தொழிலாளியான இவருடைய மகள் நந்தினி (17). சித்தாமூரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. மாணவி நந்தினி, நாள்தோறும் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்ததும், தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு தான் சரியான பதில் எழுதி உள்ளோமா? என்று புத்தகத்தை எடுத்து விடைகளை சரிபார்ப்பாராம். 

அப்போது சில கேள்விகளுக்கு அவர் சரியான முறையில் பதில் எழுதாமல் இருந்ததால், தான் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாட்டோமோ? என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற பயத்தால் அவர் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் மன உளைச்சலில் தவித்து வந்தாராம்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி நந்தினி, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி நந்தினி, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி சித்தாமூர் காவல் உதவி ஆய்வாளர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி நந்தினி, தேர்வில் தோல்வியடைந்து விடுமோ என்ற பயத்தில்தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல கோணங்களில் காவலாளர்கள்  விசாரித்து வருகின்றனர். 

click me!