மோடி அரசே விவசாயிகளை வஞ்சிக்காதே - காவிரிக்காக நாம் தமிழர் கட்சியினர் முழக்கம்...

First Published Apr 10, 2018, 9:29 AM IST
Highlights
Modi Government Do not Deceive Farmers - naam tamizhar protest


ஈரோடு 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பண்ணாரி சோதனை சாவடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சாலை மறியல், இரயில் மறியல், ஆறுர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் தமிழக மேற்கு மண்டல பொறுப்பாளர் விஜய் வின்சென்ட் தலைமையில் கட்சியினர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி சோதனை சாவடி அருகே உள்ள சாலையில் ஒன்று கூடினர். பின்னர் அனைவரும் வீர சபதம் ஏற்றனர்.

அதன்பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கட்சி கொடி படம் மற்றும் சந்தன கடத்தல் வீரப்பன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் படங்களை கையில் ஏந்திக்கொண்டு சாலையில் உட்கார்ந்து சாலை மறியல் ஈடுபட்டார்கள். 

அப்போது அவர்கள், “உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு”, “மோடி அரசே விவசாயிகளை வஞ்சிக்காதே”, “தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்காதே” என்று மத்திய அரசைக் கண்டித்து வீரமுழக்கங்களை எழுப்பினர்.

இதில், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன், கோவை இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பவானிசாகர் தொகுதி செயலாளர் பொதிகை சுந்தர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தனபாண்டியன், சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டதாக ஐந்து பெண்கள் உள்பட 150 பேரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அனைவரும் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

click me!