
மதுரை,
“தடையின்றி சல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்ற வேண்டும் அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்“ என்று, அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஊர் மக்களும் போராட்டத்தில் இறங்கினர்.
உச்ச நீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக, மூன்றாவது ஆண்டாக சல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஆனால், இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு முந்திய வாரத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் கிளர்ந்து எழுந்து போராடி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் பொங்கல் அன்றும், மறுநாளும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் தை 3-ஆம் தேதி சல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டும் சல்லிக்கட்டு நடைபெறாததால் இளைஞர்கள் சினம் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் பகலில் கல்லூரி மாணவர்கள், சல்லிக்கட்டு ஆர்வலர்கள், முகநூல் நண்பர்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் என 500-க்கும் மேற்பட்டவர்கள் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதில் சென்னை, கோவை, புதுச்சேரியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாலை 5 மணியுடன் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு காவலாளர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இரவில் கொட்டும் பனியிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
விடிய விடிய அவர்கள் போராடிய நிலையில், நேற்று அதிகாலையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் ஒலிபெருக்கி மூலம் பேசி, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் இளைஞர்கள் சல்லிக்கட்டை நடத்தாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து 3 பெண்கள் உள்பட 227 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து காவலாளர்கள் வாகனத்தில் ஏற்றினார்கள். கைதான அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலாளர்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்ற தகவலை அறிந்த அலங்காநல்லூர் கிராம மக்கள் நேற்று காலை 6 மணிக்கு அங்குள்ள கேட்டுக்கடை பாலத்தின் அருகில் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம பெண்கள், மாணவர்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர்கள் என 1000–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்டு வாடிப்பட்டி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தவர்கள் காவலாளர்கள் விடுவிப்பதாக அறிவித்தும் வெளியேற மறுத்தனர்.
“தடையின்றி சல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்ற வேண்டும். வாடிவாசலில் காளைகளை திறந்து விடவேண்டும். அதுவரை நாங்கள் ஓயப்போவதில்லை. போராடிக்கொண்டே இருப்போம்’ என்று கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டாவது நாளாகியும் அலங்காநல்லூரில் போராட்டம் நீடித்தது