TNPSC : மாணவர்களே உஷார் !! டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. எத்தனை பணியிடங்கள் தெரியுமா ?

By Raghupati RFirst Published Jan 22, 2022, 8:46 AM IST
Highlights

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறை மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய பணிகளுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்(கிரேடு 1) 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு  வருகிற 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கும். 

இதில் கட்டாய மொழி தகுதி தேர்வு, பொது அறிவு தேர்வும் நடைபெறும். தமிழ் மொழி கட்டாய தகுதி தேர்வில் 10ம் வகுப்பு கல்வி தரத்தில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவில் 75 வினாக்களுக்கும், திறனறிவு 23 வினாக்கள் என 100 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். இதில் இந்து சமய அறநிலை துறை விதிகள் பற்றிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த வினாக்கள் அனைத்தும் டிகிரி தரத்தில் இடம் பெறும். 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.  24ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முன்றாம் தாள் தேர்வு நடைபெறும். இதில் சட்டம் தொடர்பான 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தொடர்ந்து இண்டர்வியூவில் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 850 மதிப்பெண்கள் வழங்கப்படும். சென்னையில் மட்டும் எழுத்து தேர்வு நடைபெறும். 

கூட்டுறவுத்துறையில் உதவி இயக்குனர்(தணிக்கை) பதவியில் காலியாக உள்ள 8 பதவிகள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு வருகிற 21ம் தேதி வரை ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 30ம் தேதி நடக்கும். அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். பிரிவு ”அ”வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும், பிரிவு”ஆ”வில் பொது அறிவு தொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். சென்னையில் மட்டும் எழுத்து தேர்வு நடைபெறும். மேலும் கல்வி தகுதி, தேர்வு கட்டணங்கள் போன்ற விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி  இணையதளத்தில்(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

click me!