சென்னைக்கு வருகிறது மலேசியா “இரட்டை கோபுரம்”! செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?!

First Published Oct 13, 2017, 10:09 AM IST
Highlights
TNHB plans Petronas like twin towers in Nandanam


மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள “பெட்ரோனாஸ் டுவின்டவர்” போன்று சென்னையிலும் இரட்டை கோபுரம் அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரமேம்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

ரூ.750 கோடி மதிப்பில், 25 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த இரு கோபுரங்களும் அமைய உள்ளது. முதல் கோபுரம் 436 அடி உயரத்தில்(130மீட்டர்), 35 தளங்களுடனும், 2-வது கோபுரம், 754 அடி(230மீட்டர்) உயரத்தில், 50 மாடிகளுடன் கட்டப்பட இருக்கிறது.

சென்னை நந்தனத்தில் உள்ள பெரியார் கட்டிடத்துக்கு பதிலாக இந்த இரட்டை கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.  இரு இரட்டை கோபுரத்தை இணைக்கும் வகையில் அண்ணா சாலையின் குறுக்கே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட உள்ளது. கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் வடிவமைப்போலவே இந்த இரட்டைகோபுரம் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறையின் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது-

சென்னை நந்தனத்தில் உள்ள பெரியார் கட்டிடத்துக்கு பதிலாக இரட்டை கோபுரம் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் கட்டிடத்துக்கு பதிலாக கட்டப்படும் முதல் கோபுரம் 130 மீட்டர் உயரத்திலும், 35 தளங்கள் கொண்டாதாக இருக்கும். 2-வது கோபுரம் 230 மீட்டர் உயரத்திலும், 50 அடுக்குமாடிகளுடன் அமைக்கப்படும்.

இந்த திட்டம் இப்போது அரசிடம் முன்மொழியப்பட்டு, கருத்துரு வடிவத்திலேயே உள்ளது. தனியார், அரசு முதலீட்டுடன் இணைந்து இந்த இரட்டை கோபுரம் அமைந்தால், சிறப்பாக இருக்கும் என அரசு விரும்புகிறது. இதற்கான வடிவமைப்பு, வரபடம் தயார் செய்யப்பட்டுவிட்டது.

25 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த கட்டிடம் மிகப்பெரிய வர்த்தக மையமாக அமையும். ஷாங்காய் வர்த்தக மையத்தைப் போன்று பங்குவர்த்தகம், ஆடிட்டிங் அலுவலகம், நிதிமையங்கள் உள்ளிட்டவைகள் அமையும். மேலும், இதில் ஏராளமான கட்டிடங்களை வர்த்தகரீதியாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த இரு கட்டிடங்களும் அண்ணாசாலை பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவுக்கு இருக்கும்.  இதன் ஒட்டுமொத்த மதிப்புரூ. 750 கோடியாகும்.

மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைமை அலுவலகம், அதன் பல துறைகள், மூத்த அதிகாரிகளின் அலுவலகங்கள், வங்கி, அரசின் பல்வேறு துறைகள் உள்ளிட்ட பல இந்த இரட்டை கோபுரத்தில் அமைய இருக்கின்றன. இதன் மூலம், அரசுக்கு வாடகையாக ஆண்டுக்கு ரூ.250 கோடி கிடைக்கும்.

இந்த கட்டிடத்தின் அருகே மெட்ரோ ரெயிலும் வருவதால், இங்கு அலுவலகரீதியாக வந்து செல்பவர்களுக்கு மிகுந்தவசதியாக இருக்கும். விமானநிலையத்தில் இருந்து நந்தனத்துக்கு மெட்ரோ ரெயில் மூலம் வர 25 நிமிடங்கள் போதுமானது. நந்தனத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவும் முடியும். இந்த திட்டத்துக்கு தமிழக அரசின் கட்டுமான மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவையும், தனியார் முதலீட்டையும் எதிர்பார்க்கிறோம்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

click me!