நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் நகை கொள்ளை! தேர்தல் பறக்கும் படையினர் என்று கூறி கொள்ளையர்கள் அட்டகாசம்!

First Published Dec 17, 2017, 3:06 PM IST
Highlights
T.Nagar Jewel Robbery


தேர்தல் பறக்கும் படையினர் என்று கூறி, நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், களத்தில் வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆர்.கே.நகரில் கடந்த முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டதை நினைவில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில், கொள்ளை கும்பல் ஒன்று, தங்களை தேர்தல் பறக்கும் படையினர் என்று கூறி நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்துள்ளது.

சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள கேரள நகை கடையின் ஊழியரான லஷ்மன், செயின், மோதிரங்கள் உள்ளிட் 9 சவரன் நகைகளை ஹால்மார்க் செய்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த நகைகள் ஹால்மார்க் செய்வதற்காக அவர் கொண்டு சென்றுள்ளார். தியாகராய நகர், மங்கேஸ் தெரு அருகே சென்றபோது, ஒரு கும்பல் அவரை சோதனை செய்துள்ளது. தங்களை தேர்தல் பறக்கும் படையினர் எனக் கூறி சோதனை செய்துள்ளனர்.

இதன் பிறகு, லஷ்மன் கடைக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவருக்கு நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து, லஷ்மன், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையடித்தது, ஈரானைச் சேர்ந்த கொள்ளை கும்பல்தான் என்று உறுதிப்படுத்தினர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே காவல் துறையால் தேடப்பட்டு வரும் ஈரானிய கொள்ளையர்கள்தான், காவல்துறையினர் போல் நடித்து கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடித்து வருகின்றனர் என்று போலீசார் கூறுகின்றனர். வயதானவர்களைக் குறி வைத்தும், அவர்கள் செல்லும் வாகனங்களை நிறுத்தி,  நகைகளை அணிந்து செல்லக் கூடாது எனக் கூறி நகைகளைக் கழற்றி அவர்களது பாக்கெட்டிலேயே வைப்பார்கள். மீண்டும் நகை, பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பாக்கெட்டைத் தொட்டு எச்சரிப்பதுபோல், நகையைத் திருடிச் சென்று விடுவார்களாம். தற்போது அந்த கொள்ளையர்கள், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தியாகராய நகரில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

click me!