பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்
போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 19ஆம் தேதியன்று சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கல் ஏற்படும். போக்குவரத்து முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனாலும், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
அதன் தொடர்ச்சியாக, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு கடந்த 5ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இதுதொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ராஜஸ்தான் இடைத்தேர்தல்: பாஜக அமைச்சரை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர்!
பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், “ஆறு அம்ச கோரிக்கைகளில் எதையுமே ஏற்க முடியாது எனவும், பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம். வேலைநிறுத்தத்தை திரும்ப பெற முடியாது. திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். எங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்தனர்.
இன்று மாலை வரை நேரம் இருக்கிறது. அமைச்சர் எங்களை அழைத்து பேச தயாராக இருந்தால் நாங்களும் தயார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தொமுச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களை கொண்டு வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆறு அம்ச கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளை ஏற்பதாக நாங்கள் தெரிவித்து விட்டோம்; மற்ற கோரிக்கைகளை பொங்கலுக்கு பிறகு பேசி முடிவெடுக்கலாம் என கூறியும்கூட, போராட்டத்தை அறிவித்து விட்டனர் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.