சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கடந்த 27ம் தேதி முதல் உண்ணாவிதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து போராட்டத்தை 5வது நாளாக தொடர்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2009ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 8,370 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியம், அதற்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என குறைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுபோன்ற குளறுபடிகள் களையப்பட்டு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இந்த உறுதிமொழியானது திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இடம் பெற்றது.
இந்நிலையில், திமுக தனது வாக்குறுதியில் அளிக்கப்பட்ட உறுதி மொழியை நிறைவேற்றக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27ம் தேதி முதல் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர் இணைந்து போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிவடைந்தது. முதல்வரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை அவரிடம் நேரடியாக தெரிவிக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக நேற்றைய நிலவரப்படி சுமார் 140 ஆசிரியர்கள் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.