தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான மதிப்பீடு, ஆய்வறிக்கையை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்
தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 ஆய்வு அறிக்கைகளை திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். இவற்றில், தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களான, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றின் மீதான மதிப்பீடுகளும் மற்றும் பழங்குடி சமுதாயத்தினர் நிலை, பல்கலைக்கழகங்களின் வினாத்தாள்கள் தரம், கால நிலை மாற்றம், வனம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கருப்பொருள்களின் மீதான ஆய்வு அறிக்கைகளும் இடம் பெற்றுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநிலத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வது, பல்வேறு கருப்பொருள்களில் ஆய்வு மேற்கொள்வது மற்றும் மாநிலத்தில் நிலவிவரும் பல்வேறு சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் தகுந்த கொள்கைகளை வடிவமைப்பது உள்ளிட்டவை மாநிலத் திட்டக்குழுவின் செயல்பாடுகளாகும்.
undefined
அந்த வகையில், மாநிலத் திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 ஆய்வு அறிக்கைகளை திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - இத்திட்டத்தினால் அரசு தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம்
இந்த ஆய்வின் முதல்கட்ட அறிக்கையில், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, அதன் அளவு, மாணவர்களின் கல்வி மற்றும் உடல் செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களுக்கான பராமரிப்பு குறித்த மதிப்பீட்டு ஆய்வு
இந்த மதிப்பீட்டு ஆய்வானது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், கண்டறியப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ள தொற்றா நோயுற்ற மக்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவைகளையும், அவர்களுக்கு மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டதனையும் கண்டறியும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் செயலாக்கம் குறித்த ஓர் மதிப்பீட்டாய்வு
தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் தேவையையும் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் முன்னுரிமைகளுக்கேற்ப இத்திட்டம் இயைந்து செயல்படத்தக்க வகையில், மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் குறித்து இந்த அறிக்கை வலியுறுத்துகிறது
தமிழ்நாட்டின் பழங்குடி கிராமங்களில் அரசு திட்டங்களின் செயல்படுத்தல் திறன் மீதான மதிப்பீட்டு ஆய்வு
இந்த அறிக்கை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பழங்குடியினரின் குடியிருப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அரசின் திட்டங்கள் பழங்குடியினரைச் சென்று அடைகிறதா என்பதையும், அவற்றின் பலன்கள் மற்றும் அவற்றால் அவர்களின் வாழ்வில் அடைந்த முன்னேற்ற நிலை குறித்த ஆய்வின் அறிக்கை ஆகும்.
சிஏஏ சட்டம்: மத்திய அரசு விளக்கம்!
தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளின் பருவ இறுதி தேர்வு வினாத்தாள்கள் மீதான மதிப்பீட்டாய்வு
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பாடப் பிரிவுகளின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான, பல்கலைக்கழகங்களால் வடிவமைக்கப்படும் பருவ இறுதி வினாத்தாள்களின் தரத்தின் மீதான ஒரு மதிப்பீட்டாய்வு ஆகும். மாணவர்களின் கற்றல் வெளிப்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, பருவ இறுதி வினாத்தாள்களின் தரத்தில் தேவைப்படும் மாற்றங்களை இந்த அறிக்கை விவரிக்கிறது.
தமிழ்நாடு வெப்பத் தணிப்பு உத்தி
கோடை காலம் நெருங்கி வருவதால், இந்த ஆவணம் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு உத்திகளை தொகுத்து வழங்கியுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளால் மேற்கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.
குறைந்த உமிழ்வு மண்டலம் – சென்னைக்கான செயலாக்க உத்திகள்
மாசு உமிழ்வைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் இந்த அறிக்கை, நகரங்களில் “குறைந்த உமிழ்வு மண்டலம்” உருவாக்க வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள இதேபோன்ற செயலாக்க உத்திகளின் (Toolkit) அடிப்படையில், சென்னை போன்ற பெருநகரங்களில் இத்தகைய செயலாக்க உத்திகளை எவ்வாறு பின்பற்றலாம் என்பதை இந்த அறிக்கை விவரிக்கிறது.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களின் மேலாண்மை
சீமைக்கருவேல மரங்களின் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்த அறிக்கை வாழ்வாதார வாய்ப்புகளை சமரசம் செய்யாமல் சுற்றுச்சூழல் சீரழிவைக் குறைப்பதற்கான அறிவியல் தீர்வுகளையும், அவற்றிற்கு சாத்தியமான வழிகளையும் உத்திகளையும் பரிந்துரைக்கிறது
தமிழ்நாட்டில் வன ஆக்கிரமிப்பு இனங்களின் மேலாண்மை
இந்த அறிக்கையில் தமிழ்நாட்டின் வனத்தை ஆக்கிரமித்துள்ள அந்நிய களை, தாவரங்கள் மற்றும் மர இனங்களை மேலாண்மை செய்வதற்கான அறிவியல், கொள்கைகள் மற்றும் சட்ட அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளது. மாநிலத்தின் வனப்பகுதிகளின் தரம் மற்றும் வளமான பல்லுயிர் பெருக்கத்தை உறுதிசெய்வதற்கான பயனுள்ள மேலாண்மை உத்திகளை இது வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டின் நிலையான கடற்பாசி விவசாயம் முன்னோக்கி செல்லும்வழி
உள்நாட்டு கடற்பாசி விவசாயத்தை நிலையான முறையில் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை தெளிவுபடுத்துவதும், மேலும் தமிழ்நாட்டில் கடலோர பெண்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் சாத்தியமான வழிகளை முன்னிலைப்படுத்துவது இந்த அறிக்கையின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் காடுகளின் நிலை
இந்த அறிக்கை இந்திய வன ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்திய வனங்களின் நிலை என்ற ஈராண்டுக்கு ஒரு முறை வெளியிடும் அறிக்கையிலிருந்து, தமிழ்நாடு குறித்த தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு ஆகும். அதனை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வறிக்கை 2001 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் உள்ள வனம் மற்றும் பசுமை போர்வையை பகுப்பாய்வுச் செய்து மாவட்ட வாரியாக ஆராய்ந்துள்ளது.