
தமிழகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு தினசரி மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் நல வாரியம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்துள்ள தமிழக அரசு, அவர்களுக்குக் கூடுதலாகப் பல்வேறு நலத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இந்த இலவச உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு மட்டும் கட்டணமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்திட்டம் மூன்று வேளை உணவாக விரிவுபடுத்தப்பட்டு, முதற்கட்டமாகச் சென்னையில் தொடங்கப்படுகிறது. அதன்பின் படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டன.
சிகிச்சைக்குத் தனித் திட்டம்: குப்பைகளைக் கையாளும்போது தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்குச் சிகிச்சை அளிப்பதற்குக் கூடுதலாகத் தனித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
ரூ.10 லட்சம் நிவாரணம்: பணியின்போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சுயதொழிலுக்கு மானியம்: தூய்மைப் பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும்போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர் கல்வி உதவித்தொகை: தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிய குடியிருப்புகள்: நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை: கிராமப்புறங்களில் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ரூ.5 லட்சம் காப்பீடு: தூய்மைப் பணியாளர்களுக்குக் கூடுதலாக ரூ.5 லட்சம் இலவசக் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளால் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.