
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 9 பேர் பலியாயினர். தமிழகம் முழுவதும் இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு விரைவுப் பேருந்தின் டயர் வெடித்தது தான் விபத்துக்கு முக்கிய காரணம் ஆகும். தமிழகம் முழுவதும் சில அரசு பேருந்துகள் பிரேக் பிடிக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் விபத்தை சந்திக்கின்றன. அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. நமது அண்டை மாநிலமான கேரளாவை பொறுத்தவரை பேருந்தில் ஒரு கோளாறை சரி செய்யவில்லை என்றால் அந்த பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அதை டிப்போவில் இருந்தே வெளியில் எடுக்க மாட்டார்கள். டிப்போ மேலாளரும் அதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்.
ஆனால் தமிழகத்தில் அரசு பேருந்துகளை பராமரிக்க அரசும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. டிப்போ மேலாளர்களும் பேருந்துகளின் பராமரிப்பை கண்டு கொள்வதில்லை. இதனால் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் வேறு வழியின்றி பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரசு பேருந்துகள் தொடர் விபத்துகளை சந்தித்து வருவதால் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் டிப்போ மேலாளர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்துகழகம் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அதிரடி உத்தரவு
அதாவது அரசு பேருந்துகள் முறையாக இயங்குகிறதா? என்பதை ஓட்டுநர்கள், நடத்துர்கள் மற்றும் டிப்போ மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும். பிரேக் சரியாக பிடிக்கிறதா? டயர்களின் செயல் திறன் எந்த அளவுக்கு உள்ளது? டயர்களில் காற்று சரியான அளவில் உள்ளதா? என்பதை முழுமையாக பரிசோதித்த பிறகே பேருந்துகளை எடுக்க வேண்டும். பேருந்துகளின் நிலை குறித்து டிப்போ மேலாளர்கள் தொடர்ந்து அறிக்கை வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துகழகம் உத்தரவிட்டுள்ளது.