முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துகள்.. காவு வாங்கப்பட்ட 9 உயிர்கள்.. அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்

Published : Dec 25, 2025, 12:32 PM IST
Anbumani

சுருக்கம்

முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்து மோதி 2 கார்களில் பயணித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பாமக தலைவர் அன்புமணி, விபத்துக்கு திமுக அரசு தான் காரணமென குற்றம் சாட்டி உள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சாலைத் தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியதில் கார்களில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் ஆகும். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளின் டயர்கள் வெடிக்கும் நிலையில் உள்ளன என்றால் எந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசு தான் இந்த விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று” குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, 2 கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த இரு மாதங்களில், இதுபோன்ற பெரு விபத்து நடைபெறுவது நான்காவது முறை. பலமுறை வலியுறுத்தியும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இம்மாதிரியான விபத்துகளுக்குக் காரணம். ஆளும் திறனற்ற திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசுப் பேருந்துகளின் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகுவது, பயன்படுத்த முடியாத படிகளுடன் பேருந்துகளை ஓட்டுவது, பேருந்துகளே இல்லாமல் பயணிகள் அவதியுறுவது என அலட்சியத்துடன் பொதுமக்கள் உயிரில் விளையாடும் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் உள்ள தமிழக மக்கள் திமுகவை ஆட்சி அரியணையிலிருந்து இறக்காமல் விடமாட்டர்! என்று குறிப்பிட்டுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தையே உலுக்கிய விபத்து.. அரசு பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு!
ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!