
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்த நிலையில், நீதிபதி செந்தில் குமார் தவெகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
''தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. சம்பவத்தை தொடர்ந்து விஜய்யும், தவெக நிர்வாகிகளும் தலைமறைவாகி விட்டனர். என்ன மாதிரியான கட்சி இது'' என்று நீதிபதி செந்தில் குமார் கடுமையாக கூறியிருந்தார். மேலும் புஸ்ஸி ஆனந்தும், சி.டி.நிர்மல் குமாரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் நம்பிக்கை இல்லை. மாநில காவல்துறையை கொண்டு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனான் உண்மை வெளிவராது. ஆகவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் தவெக மீது தனி நீதிபதி வைத்த விமர்சனம் துரதிருஷ்டவசமானது என்றும் கூறப்பட்டது.
உயர்நீதிமன்றத்துக்கு அடுக்கடுக்கான கேள்வி
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்துக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. கரூர் பிரசாரம் தொடர்பான நெறிமுறைகளுக்காக தாக்கல் செய்யபட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? தேர்தல் பிரசார நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் மீது நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்தது எப்படி?
தனி நீதிபதி தலையிட்டது தவறு
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடக்கும் நிலையில், சென்னையில் தனி நீதிபதியும் விசாரணைக்கு எடுத்தது ஏன்? இந்த வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு? என்று உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த தமிழக அரசு, 'விஜய் மதியம் 12 மணிக்கு வருவதாக அறிவித்து விட்டு இரவு 7 மணிக்கு வந்தார். இதுவே கூட்ட நெரிசலுக்கு முக்கியம் காரணம்' என்றது.
அஸ்ரா கார்க் சிறந்த அதிகாரி
தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை அதிகாரி அஸ்ரா கார்க் ஒரு சிறந்த அதிகாரி ஆவார். சிபிஐயில் பணியாற்றிய அவரை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அதிகாரியாக பரிந்துரை செய்ததே சென்னை உயர்நீதிமன்றம் தான் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.