வேங்கைவயல் விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கைவயல் தெருவில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மனித கழிவை கலந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வரும் நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக, 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விவகாரம் தொடர்பாக விசாரிக்க திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஆதி திராவிடர் துணைத்திட்ட நிதியை தவறாக பயன்படுத்தப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்!
சிபிசிஐடி விசாரணையில், டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக மொத்தம் 25 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததற்கிடையே, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசுக்கு கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் நகலை தாக்கல் செய்ய தமிழக அரசு நீதிமன்றத்தில் அவகாசம் கோரியது. இதையடுத்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.