
பாவேந்தர் பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது'க்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 20, 2025 வரை இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி, கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ் மொழிக்கு மாபெரும் பங்களிப்பு செய்த பாவேந்தர் பாரதிதாசனைப் போற்றும் விதமாக, 35 வயதுக்கு மேல் 40 வயதுக்குட்பட்ட இளம் ஆண் மற்றும் பெண் எழுத்தாளர்கள்/கவிஞர்கள் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்படும்.
இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் முன்னதாக மே 23, 2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் நலன் கருதி, விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 20, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாகவோ, அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பத்தை நிரப்பி, "தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழுமூர், சென்னை – 600 008" என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ ஜூன் 20, 2025-க்குள் அனுப்பலாம். விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைப்பது அவசியம்.
கூடுதல் விவரங்களுக்கு, அலுவலக நேரத்தில் 044-28190412 மற்றும் 044-28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.