மெட்ரோ ரயில் திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது... பொதுநல வழக்கு ஒன்றில் தமிழக அரசு உறுதி!!

By Narendran SFirst Published Jan 5, 2023, 12:37 AM IST
Highlights

மெட்ரோ ரயில் திட்டத்தால் கோயில்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என பொதுநல வழக்கு ஒன்றில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. 

மெட்ரோ ரயில் திட்டத்தால் கோயில்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என பொதுநல வழக்கு ஒன்றில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5 ஆவது வழித்தடத்தில் பாதை அமைக்க விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தை பயன்படுத்தப்போவதாக கூறப்பட்டது. இதை அடுத்து சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈவேரா உடலுக்கு அஞ்சலி செலுத்த கோவை வந்த மு.க.ஸ்டாலின்… விமான நிலையத்தில் செந்தில்பாலாஜி வரவேற்பு!!

அதில், எந்த அனுமதியும் பெறாமல், கோயிலில் ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் 15 அடி நிலத்தை கையகப்படுத்தும் வகையில் எல்லை வரையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணியின் போது புராதன கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தமிழக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், சட்ட விதிகளையும், ஆகம விதிகளையும் பின்பற்றாமல் கோவில் நிலத்தில்  மெட்ரோ ரயில் தூண்கள் அமைத்தும், சாலை விரிவாக்கம் செய்தும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழக அரசின் பணி நீக்கம் அறிவிப்புக்கு எதிர்ப்பு... கருப்பு பட்டை அணிந்தபடி பணியாற்றிய செவிலியர்கள்!!

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, கோவில்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமென தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மீண்டும் தெளிவுபடுத்தினார். விருகம்பாக்கம் கோவில் பகுதியில் மெட்ரோ ரயில் பாதை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். 

click me!