சந்திரயான்3 வெற்றி: விஞ்ஞானி வீரமுத்துவேலுவுக்கு செல்போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Published : Aug 23, 2023, 11:19 PM IST
சந்திரயான்3 வெற்றி: விஞ்ஞானி வீரமுத்துவேலுவுக்கு செல்போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சுருக்கம்

சந்திரயான்3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல் உடன் செல்போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவின் பரப்பில் தடம் பதித்த நான்காவது நாடாக மாறியுள்ள இந்தியா, தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

சந்திரயான்-3 வெற்றியையடுத்து, அந்த வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று குறிப்பிட்டு பாராட்டினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். சந்திரயான் 3இன் திட்ட இயக்குநரான வீரமுத்துவேல் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

 

 

இந்த நிலையில், சந்திரயான்3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல் உடன் செல்போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வீரமுத்துவேல் உடன் செல்போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே உலக அளவில் பெருமை தேடி தந்துள்ளீர்கள்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உங்கள் தந்தை பேட்டியை பார்த்தேன். மிகவும் பெருமைப்பட்டுள்ளார். நீங்கள் தமிழ்நாடு வரும்போது சொல்லுங்கள் உங்களை நிச்ச்யம் சந்திக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்து சொல்லுங்கள்.” என்று தெரிவித்தார்.

முதல்வர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி தெரிவித்த விஞ்ஞானி வீரமுத்துவேல், தாங்கள் அழைத்து வாழ்த்து சொன்னது மிகவும் மகிழ்ச்சி; உங்கள் சேவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

இஸ்ரோவின் சந்திரயான் திட்டம்: 3 நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய தமிழர்கள்!

இஸ்ரோவில் பல்வேறு பதவிகளிலும், திட்டங்களிலும் பணிபுரிந்திருக்கும் வீரமுத்துவேல், கடந்த 2019ஆம் ஆண்டில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். 29 துணை இயக்குநர்களுடனும், விஞ்ஞானிகளுடனும் பொறியாளர்களுடனும் இணைந்து பணியாற்றி சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கியதுடன், அதன் வெற்றிகரமான தரையிறக்கத்துக்கும் வீரமுத்துவேல் ஆற்றிய பங்கு அளப்பரியது.

முன்னதாக, சந்திரயான்-3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டலின், சந்திரயான் நிலவு பயணங்களில் தமிழர்களின் சாதனைகளையும் நினைவுகூர்ந்தார். “சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரும் நிறைவை அளிக்கிறது. சந்திரயான் - 1, 2, 3 ஆகிய திட்டங்களை, முறையே மயில்சாமி அண்ணாதுரை, மு.வனிதா, ப.வீரமுத்துவேல் எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சிறந்த அறிவியலாளர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்தியுள்ளனர். இவர்களது அர்ப்பணிப்புணர்வும் திறமையும் நமக்கு எழுச்சியூட்டுகிறது. தமிழ்நாட்டின் இளந்திறமையாளர்கள் அனைவரும் இவர்களது வழித்தடத்தைப் பின்பற்றி, நம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 09 December 2025: கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..