
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் இன்று தாக்கல் செய்தார். அவர் பேசியதாவது:
ரூ.100 கோடி
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் பழமையான கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்து சமய அறநிலைத்துறைக்கு ரூ.340.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் தர்கா, தேவாலயங்கள்
தமிழகத்தில் சிறுபான்மையினரின் தேவாலயங்கள், தர்காக்கள், பள்ளிவாசல்களை புனரமைக்கவும், பழுதுபார்க்கவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
அந்த வகையில், சென்னையில் உள்ள வெஸ்லி தேவாலாயம், புனிததோமையர் மலை தேவாலயம், திருநெல்வேலியில் உள்ள கால்டுவெல் தேவாலயம், நாகர்கோவிலில் உள்ள தூய சேவியர் தேவாலயம், சென்னையில் உள்ள நவால் வாலஜா பள்ளிவாசல், ஏர்வாடி தர்ஹா, நாகூர் தர்ஹா ஆகிய பழமையான வழிபாட்டு தலங்கள் சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை ஆகியவற்றுக்குச் சேர்த்து, ரூ.1,230.37 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலன்
சிறப்புத்தேவையுள்ள ஒவ்வொரு குழந்தையும் நன்கு வளர்வதற்கான வாய்ப்பை உறுதி செய்வது அரசின் கடமையாகும். தற்போது மருத்துவத்துறை, மக்கள் நல்வாழ்வு, சமூகநலம், மகளிர் உரிமைத் துறை, பள்ளி கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை தனித்தனியாக தனித்தனியாக சிகிச்சையளி்க்கின்றன. இனிவரும் காலத்தில் அனைத்து துறைகளுக்கும் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்து செயல்பட்டு, சிறப்புத் தேவையுடன் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அரசு தேவையான சிகிச்சை, நடவடிக்கையை வழங்கும்.
ஊதிய உயர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியத்தை அரசுவழங்கி வருகிறது. இங்குபணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுனர், சிறப்பு பயிற்சியாளர்களுக்கு தற்போது ரூ.14 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது, இது ரூ.18ஆயிரமாக உயர்த்தப்படும்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு பழனிவேல் ராஜன் தெரிவித்தார்