
சிறு, குறுநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் குறுநிறுவன மேம்பாட்டுக்குழுமம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அவர் பேசியதாவது:
சிறு குழுமம்
மாநிலம் முழுவதும் குறுநிறுவனங்களைக் கொண்ட பல்வேறு குழுமங்கள் உள்ளன. அவற்றுக்கு உதவிடும்வகையில் குறுநிறுவன குழுமத்திட்டம் ஒன்றை ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் அரசு தொடங்கும். திருநெல்வேலியில் மாவட்டத்தில் பாத்திரங்கள் செய்யும் குழுமம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர்கள் செயற்கை நகைகள் செய்யும் குழுமம், கடலூர் மாவட்டத்தில் முந்திரிபதப்படுத்தும் குழுமம், மதுரை மாவட்டத்தில் பொம்மை செய்யும் குழுமம் இந்த ஆண்டு பயன்பெறும்
கயிறு மேம்பாட்டு நிறுவனம்
தென் நாரிலிருந்து உருவாக்கப்படும் கயிறு உற்பத்தியி்ல தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் உருவாக்கப்படும் தென்நார் கயிறு மற்றும் மதிப்புக் கூட்டப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனையை மேம்படுத்தவும், மாநிலம்முழுவதும் கயிறு தொழில்குழுமங்களை மேம்படுத்தவும், கோவை நகரில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கப்படும். இதற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்படும்
சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு மூலதனமானியமாக ரூ.300 கோடி ஒதுக்கப்படும்.கடன் உத்தரவாதத் திட்டத்துக்காக ரூ.100 கோடியும் ஒதுக்கப்படும். சிறு,குறு,நடுத்தரத் தொழில்களுக்கு பட்ஜெட்டில் ரூ.911.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில்கள்:
தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.100 கோடியில் சிறப்பு நிதி உருவாக்கப்படும்.
தோல்சார்ந்த, தோல் சாராத காலணிகள் உற்பத்தியில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய காலணி மற்றும் தோல் தொழில்மேம்பாட்டு கொள்கை உருவாக்கப்படும்.
கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காக்கள் உருவாக்கப்படும். இந்த பூங்காக்கள் மூலம் ரூ.50ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படும்.
பிள்ளைப்பாக்கம் மற்றும்மாநநல்லூரில் மின்னணு பொருட்கள் தயாரிக்கும் இருசிறப்பு பூங்காக்கள் மத்திய அரசின் உதவியுடன் உருவாக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன முனையம் உருவாக்கப்படும். தொழில்துறைக்கு ரூ.3,267 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப்
தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கு தொடக்க நிதியாக ரூ.50 கோடியைஅரசு வழங்கும். மதுரை,ஈரோடு, திருநெல்வேலியில், புதிதாக தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் உருவாக்கப்படும்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ75 கோடி முதலீட்டில் அனைத்துவசதிகளுடன் கூடிய, ஸ்டார்ட்அப் மையம் தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்படும்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் புத்தாக்கப் பொருட்களை ரூ.50 லட்சம் வரை அரசுநிறுவனங்களே கொள்முதல் செய்யும்
இவ்வாறு பழனிவேல் ராஜன் தெரிவித்தார்