சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நாளை மறுநாள் வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ஆம் தேதி (இன்று) கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.
கூட்டத்தொடர் தொடங்கியதும், மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, கேள்வி-பதில் நேரம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்த சூழலிலும் தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை விட்டு தராமல் பெற்று தருவோம் என்று உறுதியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய பாஜக எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீனிவாசன், காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் சில வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீரர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!
இதையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், பேரவையின் இன்றைய அலுவல்கள் முடிவடைந்ததாகவும், அவை நாளை காலை கூடும் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.
அதன்பிறகு, சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை அக்டோபர் 10,11 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், நிகழாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளை நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா்.