விபத்து இல்லாத மாவட்டமாக திருப்பூரை மாற்ற வேண்டும் - ஓட்டுநர்களிடம் ஆட்சியர் வேண்டுகோள்...

 
Published : May 11, 2018, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
விபத்து இல்லாத மாவட்டமாக திருப்பூரை மாற்ற வேண்டும் - ஓட்டுநர்களிடம் ஆட்சியர் வேண்டுகோள்...

சுருக்கம்

Tirupur to be no accident district - collector request to the drivers

திருப்பூர்

ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சாலை விபத்துக்களை முழுமையாக தவிர்த்து விபத்து இல்லாத மாவட்டமாக திருப்பூரை மாற்ற வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் திருப்பூர் - காங்கேயம் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் உள்ள கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. 

இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், "நாளுக்கு நாள் விபத்து அதிகரித்து வருகிறது. நாம் மட்டும் வாகனத்தை ஒழுங்காக ஓட்டுகிறோம் என்ற நிலையில் இல்லாமல் நம்மை கடந்து செல்பவர்களும், எதிரே வருபவர்களும் சரியாக வருகிறார்களா? என்பதை அறிந்து வாகனம் ஓட்ட வேண்டும். 

அதிக முன் அனுபவம் இருந்தாலும் எதிரே வரும் வாகன ஓட்டிகளும் சரியாக வந்தால்தான் விபத்தை 100 சதவீதம் தவிர்க்க முடியும். மேலும், ஓட்டுநர்களின் சிறு, சிறு, தவறுகளாலேயே அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகிறது. 

வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசுவதை ஓட்டுநர்கள் தவிர்க்க வேண்டும். ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சாலை விபத்துக்களை முழுமையாக தவிர்த்து நமது மாவட்டம் விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சாலை விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முருகானந்தம் (திருப்பூர் தெற்கு), ரஜினிகாந்த் (திருப்பூர் வடக்கு), காவல் உதவி ஆணையர் ராஜ்கண்ணா, மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் தமிழரசு, 

அசோக் லைலாண்ட் பயிற்சி நிறுவன அலுவலர் பாலசுப்பிரமணியம், வாகன ஆய்வாளர்கள் பாஸ்கரன், கோகுலகிருஷ்ணன், பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!