பெண் பயணிக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு பேருந்து ஓட்டுநர்; நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் 4 மணிநேரம் போராட்டம்...

First Published May 11, 2018, 9:07 AM IST
Highlights
government bus driver threatened to kill female passenger People fight for 4 hours to take action ...


திருப்பூர்
 
பெண் பயணிக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலம்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு 4 மணி நேரம் மக்கள் போராடினர்.

திருப்பூர் மாவட்டம், கணியாம்பூண்டியை அடுத்த கிணத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மயிலாத்தாள் (54). இவர் திருப்பூர் கல்லூரி சாலை ரங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவன உணவுக்கூடத்தில் வேலை செய்கிறார். 

தினமும் வேலைக்கு செல்வதற்காக மயிலாத்தாள், கணியாம்பூண்டியில் இருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் செல்லும் தடம் எண் 25 என்ற அரசு பேருந்தில் பயனிப்பது வழக்கம்.

இந்த நிலையில் மயிலாத்தாள், பனியன் நிறுவனத்தில் வேலை முடிந்ததும், கணியாம்பூண்டி செல்வதற்காக ரங்கநாதபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக கணியாம்பூண்டி செல்லும் தடம் எண் 25 அரசு பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் பேருந்தை நிறுத்தவில்லை. 

அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்தவர்கள் சத்தம் போட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து மயிலாத்தாள் அந்த பேருந்தில் ஏறி சென்றார். அப்போது ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன், மயிலாத்தாளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

இதேபோல கடந்த 30-ஆம் தேதியும், அதே பேருந்தில் பயணம் செய்த மயிலாத்தாளை, அன்று பணியில் இருந்த ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன், தகாத வார்த்தைகைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 வேலம்பாளையம் காவல் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மேலாளர் ஆகியோருக்கு மயிலாத்தாள் புகார் கொடுத்தார். இந்த புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மயிலாத்தாள் மற்றும் அவருடைய உறவினர்கள் நேற்று 15 வேலம்பாளையம் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அப்போது ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த முற்றுகை போராட்டம் சுமார் 4 மணிநேரம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து ஓட்டுநர் கோபாலகிருஷ்ணனை அழைத்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அவருக்கு ஆதரவாக சில அரசு பேருந்து ஓட்டுநர்களும் அங்கு வந்தனர். அப்போது அந்த வழியாக திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பூண்டி வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் தடம் எண் 105 என்ற பேருந்து வந்தது. 

இந்த பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு, கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக காவல் நிலையம் வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டனர்.

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து மயிலாத்தாள் தரப்பினருக்கும், அரசு பேருந்து ஒட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் சண்முகம் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

அப்போது அரசு பேருந்து ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன், இனி இதுபோல் நடக்காது என்று உறுதியளித்தார். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

click me!