
தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வரும் டிச.6ம் தேதி வரை சற்று எச்சரிகையுடன் இருக்குமாறு மீனவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் வலுவான குறைவழுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று அதே பகுதியில் நீடிக்கிறது. வரும் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறக்கூடும்.
டிச.6ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் நோக்கி அது நகரக்கூடும். எனவே இந்தக் கால கட்டத்தில் மீனவர்கள் தெற்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்...” என்று கேட்டுக் கொண்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் 6 செ.மீ.மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 4 செ.மீ., தேனி மாவட்டம் பெரியகுளம் 3 செ.மீ., கடலூர் மாவட்டம் சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் 2 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, அணைக்காரன்சத்திரம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிய பாலச்சந்திரன், சென்னை நகரில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என்றும் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல், வழக்கமான பருவமழை இயல்பைவிட இந்த முறை 5 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என்றும் கூறினார்.