உடைஞ்ச மதகை சரி செய்யுறாங்க... ஆனாலும் போன தண்ணி போனதுதான்...!

First Published Dec 4, 2017, 2:28 PM IST
Highlights
krishnagiri dam damaged shutter removing process begins today


கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் உடைந்த மதகை சரி செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக, சென்ற மாதம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மட்டுமல்லாது, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைப் பொழிவு இருந்தது. 

இதனிடையே, கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக, கே.ஆர்.பி. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடிக்கு நீர் தேங்கியது. இதனால் அணை நிரம்பும் நிலைக்கு வந்தது. ஆனால், அணை நீரின் அழுத்தம் தாங்காமல் பிரதான மதகின் கடைசி ஷட்டர் உடைந்து தண்ணீர் அதன் வழியே ஆக்ரோஷத்துடன் வெளியேறியது. 

இதனால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. பின்னர் அணையை மாவட்ட ஆட்சியர் உள்பட, வல்லுநர் குழு அணையைப் பார்வையிட்டது. மேலும், அணையை பராமரித்து வந்த பொறியாளர்,  ஓய்வு பெறும் நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இதனிடையே  அணையை ஆய்வு செய்த வல்லுனர்கள் குழு அணையின் நீர்மட்டத்தை 32 அடியாகக் குறைத்த பின்பே உடைந்த மதகை சரி செய்ய முடியும் என கருத்து தெரிவித்தனர்.

இதனால், அணையின் மற்ற மதகுகளும் திறக்கப் பட்டு, அணையின் நீர்மட்டம் 51 அடியில் இருந்து 32 அடியாகக் குறைக்கும் வரை  தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

இந்தப் பணிகள் தொடங்க 6 நாட்கள் ஆன நிலையில், சீரமைப்புக்குத் தேவையான பொருட்கள் இன்று அதிகாலை வந்ததை அடுத்து அணையின் உடைந்த மதகின் ஷட்டரை அகற்றும் பணி துவங்கப்பட்டது.  இதற்காக, 6 பேர் கொண்ட குழுவினர் மதகின் ஷட்டரை வெல்டிங் கருவி மூலம் துண்டு துண்டாக வெட்டி, அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது முடிந்த பின்னர், மதகு புதிதாக அமைக்கப்படும் என்று தெரிகிறது. 

பராமரிப்புப் பணியில் ஏற்பட்ட மெத்தனம் காரணமாக,  ஒரு மதகு உடைந்ததால், அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீர்  வெளியேற்றப்பட்டது பொது மக்களை பெரிதும் வருத்தத்தில் ஆழ்த்தியது. வாராது வந்த மாமணி போல் பெய்த மழையை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாமல் போன துரதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணிப் புலம்புகின்றனர் அப்பகுதி மக்கள். 

click me!