
அரூர்,
ஓட்டுநரின் செயலால் உயிரிழந்த அரசு பேருந்தில் பயணம் செய்தவரின் குடும்பத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் மூன்று வருடங்கள் காலதாமதம் செய்த அரசு பேருந்தை பறிமுதல் செய்யப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தாதனூர்புதூரைs சேர்ந்தவர் மணி (47). இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ஆம் தேதி அரூரில் இருந்து தீர்த்தமலைக்கு செல்ல அரசு நகர பேருந்தில் ஏறினார்.
இந்த பேருந்து அரூர் அம்பேத்கர் நகர் அருகே சென்றபோது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததில் அந்த பேருந்தில் நின்று கொண்டிருந்த மணி, நிலைதடுமாறி பேருந்து படிக்கட்டில் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து விபத்து இழப்பீடு கோரி மணியின் குடும்பத்தினர் அரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மணியின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சத்து 71 ஆயிரத்து 200 இழப்பீடு வழங்க நீதிமன்றம் கடந்த 2014–ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதன்படி இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், இழப்பீட்டு தொகை மற்றும் அதற்கான வட்டியைச் சேர்த்து ரூ.6 இலட்சத்து 95 ஆயிரத்து 633 வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.
இதன்படி இழப்பீடு வழங்குவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டதால் அரசு போக்குவரத்து கழக பேருந்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி நீதிமன்ற ஊழியர்கள் சேலத்தில் இருந்து அரூர் பேருந்து நிலையத்திற்கு வந்த வேலூர் செல்லும் அரசு பேருந்தை பறிமுதல் செய்தனர்.