
சேலம்
எடப்பாடியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால் ஆய்வாளர் பரிந்துரையை ஏற்று ஆட்சியர் ரோகிணி அந்த மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நெடுங்குளம், எல்லமடை கானாகாடு வளைவு பகுதியில் கடந்த மாதம் ரேசன் அரிசி கடத்திவந்த லாரி ஒன்று விபத்துக்கு உள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், எடப்பாடி, பூலாம்பட்டி, பவானி பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை சிலர் வாங்கி, அதை பூலாம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்து அங்கிருந்து பெங்களூருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த 10 டன் ரேசன் அரிசியை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஏற்காடு சத்யாநகரை சேர்ந்த சிவசக்தி, செட்டிமாங்குறிச்சி கோவிந்தராஜ், சண்முகம், கோவிந்தன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன், மோளபாளையம் சக்திவேல், நாமக்கல்லை சேர்ந்த கோவிந்தராஜ், அரிஹரன், டேவிட், லாரி ஓட்டுநர் கேசவராஜ் ஆகிய பத்து பேரையும் காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளவரசன், சக்திவேல், நாமக்கல்லை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோர் மீது ஏற்கனவே ரேசன் அரிசி கடத்தல் வழக்கு உள்ளன.
மேலும், இவர்கள் மூன்று பேரும் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள்ளதால் அவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவராஜன், மாவட்ட ஆட்சியர் ரோகிணிக்கு பரிந்துரைத்தார்.
இதனை பரிசீலனை செய்த ஆட்சியர், அவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, சேலம் மத்திய சிறையில் உள்ள இளவரசன் உள்பட மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம் காவலாளர்கள் கொடுத்தனர்.