
துரித உணவிற்கு அடிமையான மக்கள்
இயற்கையான உணவுகளை சாப்பிட்டு வந்த மக்களுக்கு நாள்தோறும் புதிய வகை உணவாக அறிமுகம் ஆகும் துரித உணவானது பழகி போய்விட்டது. பிரைடு ரைஸ், சிக்கன் கபாப், நூடுல்ஸ் என பல வகையான உணவுகளுக்கு மக்கள் அடிமையாகியுள்ள நிலையில் தற்போது ஷவர்மா என்ற மாலை நேர உணவானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயக்கி உள்ளது. 50 ரூபாயில் இருந்து தொடங்கும் சிக்கன் ஷவர்மா 300ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் ஆர்வமோடு ஷவர்மா வாங்கி உண்பதால் தெருவிற்கு தெரு ஷவர்மா கடை முளைத்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் அழுகிய சிக்கனை வைத்து ஷவர்மா தயாரிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி
கடந்த வாரம் கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட கண்ணூர் கரிவெள்ளூரைச் சேர்ந்த 16 வயது மாணவி தேவநந்தா உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த உணவகத்தில் சாப்பிட்ட மேலும் சிலருக்கும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் செயல்பட்ட அந்த 'கூல்பார்' சீல் வைத்தனர். இதனையடுத்து தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், மதுரையில் 52 ஷவர்மா கடைகளில் சோதனை நடத்தினர். இதில் 5 கடைகளில் கெட்டுப்போன 10 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்று முடிவடைவதற்குள் புதிதாக ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
3 மாணவர்கள் பாதிப்பு
தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் இயங்கி வந்த ஷவர்மா கடையில் கால்நடை கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். இதில் பிரவீன், பரமேஸ்வரன், மணிகண்டன் 3 பேருக்கு நேற்று இரவு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அந்த 3 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அந்த உணவு விடுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உணவு மாதிரிகளை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.