
தஞ்சாவூர்
காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற தாய், மகன் உள்பட மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பேட்டை வடக்கு மேலத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவரது மனைவி நாகலஷ்மி (34). இவர்களது மகள் சர்மிளா (12), மகன் விமல்ராஜ் (7). நாகலஷ்மியின் அண்ணன் தமிழரசன் மனைவி கலைச்செல்வி (40). வாய் பேச இயலாதவர். அவரது மகள் சௌமியா (12).
இவர்கள் ஐவரும் நேற்று மாலை காவிரி ஆற்றின் செட்டி படித்துறையில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற நாகலஷ்மி, அவரது மகன் விமல்ராஜ், தமிழரசனின் மகள் சௌமியா ஆகியோர் நீரில் மூழ்கினர்.
இதனையடுத்து, சர்மிளா அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.