
திமுக எம்எல்ஏ ஒருவரிடம், தான் விஜிலென்ஸ் ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டிய துணை நடிகர் ஒருவர் போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் சென்னை, திருவொற்றியூரில் நடந்துள்ளது.
சென்னை, பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் கருணாநிதி. இவருக்கு நேற்று இரவு, தொலைபேசியில் ஒருவர் பேசினார். அப்போது, தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பேசுகிறேன். உங்கள் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளது. என்னிடம் உங்கள் தொடர்பான முக்கிய ஃபைல் உள்ளது. எனவே, உங்கள் வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக உங்களிடம் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு எம்எல்ஏ கருணாநிதி, தன்னுடைய வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த நபர், என்னை போலீசார் கண்காணித்து வருகின்றனர். நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் எனக்கு சிக்கல் ஏற்படும். எனவே ஓட்டலுக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, சிலருடன் கருணாநிதி எம்எல்ஏ ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏவை சந்தித்த நபர், தன்னுடைய பெயர் வரதராஜன் என்று கூறி, அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். இதனை அடுத்து, உங்கள் தொடர்பான முக்கிய ஃபைல் உள்ளது. அதனை உங்களிடம் ஒப்படைக்க 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு எம்எல்ஏ கருணாநிதி, நீங்கள் கேட்கும் பணம் என்னிடம் இல்லை. நானே வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன் என்றார். இதை அடுத்து, வரதராஜன் அங்கிருந்து சென்று விட்டார். மீண்டும் எம்எல்ஏவை தொடர்பு கொண்ட வரதராஜன், கீழ்கட்டளை சிக்னல் வரும்படி தெரிவித்துள்ளார்.
வரதராஜன் கூறியபடியே எம்எல்ஏவும் அங்கு சென்றுள்ளார். சந்தேகமடைந்த எம்.எல்.ஏ. தரப்பினர், போலீஸ் கமிஷ்னருக்கு இது குறித்து கூறியுள்ளனர். இதை அடுத்து, எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்ட போலீஸ் அதிகாரிகள், வரதராஜனின் செல்போன் எண்ணை வாங்கி அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயன்றனர். மேலும், வரதராஜனின் செல்போனுக்கு வழக்கறிஞர்கள் சிலர் தொடர்பு கொண்டு மிரட்டினர். இதனால் பயந்து போன வரதராஜன், அங்கிருந்து கிளம்பி விட்டார். மேலும் எம்எல்ஏவின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் நாளை சந்திப்போம் என்று வரதராஜன் தகவல் அனுப்பியிருந்தார்.
இந்த தகவலைப் பார்த்த போலீசார், எம்.எல்.ஏ. கருணாநிதியை வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு வரதராஜனை தேடினர். அவரது செல்போன் சிக்னல், திருவொற்றியூரைக் காட்டியது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், வரதராஜனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, விசாரணையில், வரதராஜன் சினிமா துணை நடிகர் என்பது தெரியவந்தது. மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் 35 லட்சத்துக்கும் மேல் பணத்தை இழந்துள்ளார் என்பது இதனால் விரக்தி அடைந்த அவர் போலியாக விஜிலென்ஸ் அடையாள அட்டை தயாரித்து எம்.எல்.ஏ.வை பணம் கேட்டு மிரட்டியதையும் ஒட்பபுக் கொண்டார். வரதராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வரதராஜனிடம் இருந்து போலி ஐடி கார்டையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.