
அடுத்த மாதம் 12ம் தேதி ஆர்கே நகர் தொகுதிக்கு இடை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, அதிமுகவின் 3 அணிகள் உள்பட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பி.எஸ். - சசிகலா என இரு அணிகளாக பிரிந்து, செயல்படுகின்றன. இதில், இரு அணியினருமே இரட்டை இலை சின்னத்தை கேட்டனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை மின் கம்பமும், சசிகலா அணிக்கு தொப்பியும் சின்னமாக வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து நேற்று மாலை சசிகலா அணி வேட்பாளர் தினகரன், ஆர்கே நகர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திறந்தவெளி ஜீப்பில் தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைவரும் தொப்பி அணிந்து சென்றனர்.
வேட்பாளருடன் சென்ற எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அனைவரும் தொப்பி அணிந்து சென்றனர். இதனால், சென்னை நகரில் தொப்பி வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.
இதையொட்டி, பல்வேறு டிசைன்களில் பர்மா பஜார் பகுதிக்கு ஆயிரக்கணக்கான தொப்பிகள் வந்து குவிந்துள்ளன.
பிரச்சார ஊர்வலத்தில் கலந்து கொள்ள பல்வேறு தொகுதியில் இருந்து வரும் தொண்டர்களுக்கு தொப்பியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பர்மா பஜாரில் உள்ள கடைகளுக்கு பல டிசைன்களில் தொப்பிகள் வேண்டும் என ஆர்டரும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.