
கோவை சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை அறிக்கையை ககன்தீப் சிங் பேடி தாக்கல் செய்தார். தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து அறிக்கையை விசாரணை அதிகாரி ககன்தீப் சிங்பேடி தாக்கல் செய்தார்.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரில் பஸ் நிலைய மேற்கூரை கடந்த 7-ந் தேதி இடிந்து விழுந்தது. இதில் அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார், கல்லூரி மாணவி தாரணி, பழனியப்பன் ற்றும் ஈஸ்வரி, துளசி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் விசாரனை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்கும் பொருட்டும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடியை ஒரு நபர் விசாரணை குழுவாக தமிழக அரசு நியமித்தது.
இதுதொடர்பாக அப்போதைய உதவி என்ஜினீயர் பரமசிவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஐ.ஏ.எஸ்.அதிகாரி ககன்தீப் சிங் பேடி கோவைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், பேருந்து நிலையம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை அறிக்கையை ககன்தீப் சிங் பேடி தாக்கல் செய்தார்.