காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட இதுதான் காரணம் - குண்டை தூக்கி போடுகிறார் ஐயாக்கண்ணு...

First Published Mar 13, 2018, 10:09 AM IST
Highlights
This is the reason for central government to act against Tamil Nadu in Cauvery issue


விருதுநகர்

தமிழகத்திற்கு தேவையான காவிரி நீர் கிடைத்தால் மத்திய அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்படும் என்பதால்தான் காவிரிப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்படைந்த பகுதிகளில் விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. 

அதுவும் இழப்பீட்டு தொகைக்கான பிரீமியம் கட்டிய அனைவருக்கும் வழங்கப்படவில்லை. நெற்பயிர் தவிர இதர பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. 

இதுபற்றி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாதநிலை உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள விதைகளை இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. இதற்கு தடைவிதிக்க வேண்டும். மக்காச்சோளத்துக்கு உரியவிலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருச்சுழி பகுதியில் குண்டாற்றில் தடுப்பணை கட்டி மழைக்கால வெள்ளநீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வருசநாட்டிற்கு மலைப்பாதை அமைக்க வேண்டும். 

விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் 2000 அடி ஆழத்தில் இருந்து நிலத்தடி நீரை எடுத்து சூரிய மின் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும் வரை நிலத்தடி நீர்மட்டம் உயரும் வரை சூரியஒளி மின் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான துண்டுபிரசுரங்களை விநியோகித்துவிட்டு சென்னையில் முதலமைச்சரை சந்திக்க உள்ளோம். 

மத்திய அரசு வருகிற 29-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு தூக்குபோடும் போராட்டம் நடத்துவோம். 

கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தமிழக அரசும், பா.ஜனதா அரசுக்கு பயந்து அழுத்தம் கொடுக்க தயங்குகிறது. 

தமிழகத்திற்கு தேவையான காவிரி நீர் கிடைத்தால் மத்திய அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்படும் என்பதற்காகவே இந்தப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது" என்று அவர் கூறினார். 

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் சிவஞானத்தை சந்தித்து விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க கோரி விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.  

click me!