டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஆட்சியரிடம் முறையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

First Published Mar 13, 2018, 9:49 AM IST
Highlights
Government school students appealed to collector for close liquor shops...


விழுப்புரம்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று விழுப்புரம் ஆட்சியரிடம் அரசுப் பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா ஜி.அரியூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள், ஆட்சியர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். 

அந்த மனுவில், "எங்கள் கிராமத்தில் இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு கடைகளும் பிரதான சாலையில் உள்ளன. எங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் இந்த கடைகளை கடந்துதான் பள்ளிக்கு சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. மக்களும் அத்தியாவசிய தேவைக்காக இந்த கடைகளை கடந்துதான் சென்று வருகின்றனர்.

இப்படியிருக்க இந்த டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு குடிக்க வருபவர்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இங்கு சாராயம் குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் நடுரோட்டிலேயே நின்றுகொண்டு அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் மக்களிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர். 

இதனைத் தவிர்க்க எங்கள் ஊரில் உள்ள இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். 

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சுப்பிரமணியன் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுச்சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

click me!