
வேலூர்
விநியோகிக்கப்படும் குடிநீரில் கோழிக் கழிவுகள், கொத்தாக மனிதர்களின் தலைமுடி போன்றவை கலந்து வருவதால் மூர்த்தியூர் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், மண்டலவாடி ஊராட்சியில் உள்ள மூர்த்தியூர் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வாணியம்பாடி - ஜோலார்பேட்டை பிரதான சாலையில் மூர்த்தியூர் அருகே உள்ள தரைப்பாலத்தின் அடியில் இருக்கும் குழாயின்மீது மர்ம நபர்கள் மனிதர்களின் தலைமுடி மற்றும் கோழிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டிச் சென்று விடுகின்றனர்.
மேலும், சில நேரங்களில் குழாயில் ஏற்படும் பழுதால் உடைப்பு ஏற்பட்டு, அங்கு குடிநீரில் கழிவுகள் கலந்துவிடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கொத்தாக தலைமுடி கலந்து வந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுபோன்றே நடந்து வருவதால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். எனவே, நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.