
கொசு உற்பத்தியை தடுக்காத திருவாரூர் ரயில் நிலையத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் டெங்குவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
டெங்குவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து, கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில், சுகாதார கேடுகள் நிறைந்த பகுதிகளை கண்டறிந்து, அதனை தூய்மைப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ், ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலையம் சுகாதார கேடுகள் நிறைந்தாகவும், சாக்கடை தண்ணீர் நிறைந்து கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் இருந்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் திருவாரூர் ரயில் நிலையத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் உடனடியாக ரயில் நிலையத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.