
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் 45 நாட்களாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூரை அடுத்த துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சியில் காந்தி நகர் மேற்கு, திருகாளியம்மன் கோவில் வீதி, வெங்கிட்டமாள் காலனி, பாலாஜி நகர், மந்திராலயா கார்டன், அர்ஜூன் அவென்யூ ஆகிய பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளுக்கு கடந்த 45 நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் அசோகபுரம் ஊராட்சி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்ததால் சினம் கொண்ட பெண்கள் மற்றும் மாணவ - மாணவிகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை இடிகரை - அன்னூர் சாலை செங்காளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திரண்டனர். அவர்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் காவலாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதா, பெரியநாயக்கன்பாளையம் முன்னாள் ஒன்றிய சேர்மன் சாந்தாராம், அசோகபுரம் ஊராட்சி செயலர் லீலா கிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர்.
அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘உங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர்.
அதனையேற்ற மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.