
கன்னியாகுமரி
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஆயுதப்படை காவலர் மனைவியிடம் இருந்து ரூ.2 இலசத்தை திருடி திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். திருடர்களை வலைவீசி காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வில்லுக்குறி அருகே உள்ள மணக்கரை புதூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நெல்லை மாவட்டத்தில் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சுஜி சாலினி (31).
நேற்று காலை 11 மணியளவில் சுஜி சாலினி, தனது தாயார் சாந்தி (55) மற்றும் மூன்று வயது குழந்தையுடன் வில்லுக்குறியில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்தில் புறப்பட்டார். அப்போது, அவர் நிலம் வாங்குவதற்காக தனது கையில் வைத்திருந்த பையில் ரூ.2 இலட்சம் வைத்திருந்தார்.
பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த அந்த பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமல் கூட்ட நெரிசலில் நின்றுகொண்டே பயணம் செய்தார். அந்த பேருந்து சுங்கான்கடையில் சென்றபோது, சுஜி சாலினிக்கு உட்கார இடம் கிடைத்தது. இடத்தில் அமர்ந்தவுடன் தனது கையில் இருந்த பையை பார்த்தபோது அது திறந்து இருந்ததையும், அதில் ரூ.2 இலட்சம் பணம் இல்லாததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
யாரோ மர்ம நபர்கள் பையை திறந்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றதை உணர்ந்து பணத்தை பறிகொடுத்த வருத்தத்தில், சுஜி சாலினி கதறி அழுதார். இதனால் பேருந்து பயணிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
களியங்காடு பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் விசாரித்த போது, அனைவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறினர். அத்துடன் சுங்கான்கடை பேருந்து நிறுத்தத்தில் மூன்று பெண்கள் இறங்கியதாக சக பயணிகள் கூறினர். இதனால், அவர்கள்தான் பணத்தை திருடியிருக்க வேண்டும் என பயணிகள் கூறினர்.
உடனே, பேருந்து ஒட்டுநரும், நடத்துநரும் சுங்கான்கடை பகுதிக்குச் சென்று விசாரிக்கும்படி கூறி, சுஜி சாலினியையும் அவரது தாயார் மற்றும் குழந்தையையும் நடுவழியில் இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
கீழே இறங்கிய சுஜி சாலினி தனது தாயாருடன் சாலையில் அழுதபடி சுங்கான்கடை பகுதிக்குச் சென்றார். இதைப்பார்த்து அந்த பகுதியில் நின்ற மக்கள் என்ன? ஏது? என்று விசாரிக்கத் தொடங்கினர். அத்துடன் இந்தச் சம்பவம் குறித்து இரணியல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
காவலாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சுஜி சாலினியிடம் விசாரணை நடத்தியதோடு சுங்கான்கடை பகுதியில் இறங்கிய மூன்று பெண்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.