சல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது எப்படி? விசாரணை தொடங்கியது…

 
Published : Feb 17, 2017, 09:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது எப்படி? விசாரணை தொடங்கியது…

சுருக்கம்

சேலம்

சல்லிக்கட்ட்டில் கலவரம் எப்படி ஏற்பட்டது? காணம் என்ன? என்று விசாரணை ஆணைய நீதிபதி சேலத்தில் நேற்று மாலை முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலாளர்களிடம் கேள்வி கேட்டு விசாரித்தார்.

தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று கடந்த மாதம் தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். சேலத்திலும் இந்தப் போராட்டம் ஆறு நாள்கள் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்தின்போது கடந்த மாதம் 19–ஆம் தேதி பெங்களூரு – காரைக்கால் பயணிகள் இரயில் சேலம் பெரியார் மேம்பாலத்தின்கீழ் சிறைப் பிடிக்கப்பட்டது. மேலும் இரயிலும் சேதமாக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தின்போது வீராணம் சத்யாநகரைச் சேர்ந்த யோகேஸ்வரன் (17) மின்சாரம் தாக்கி பலியானார்.

போராட்டத்தின் இறுதி நாளில் சென்னை மெரினாவில் கலவரம் ஏற்பட்டது. அதேபோல் அலங்காநல்லூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் காவலாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் காட்டுமிராண்டித் தனமாக தடியடி நடத்தினர்.

இவர்களது தாக்குதலில் காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்ற எந்த தகவலையும் வெளியிடாமல் வைத்துள்ளது அரசு.

சல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார்.

விசாரணை அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் முதல்கட்ட ஆய்வு நடத்துவதற்காக நேற்று மாலை சேலம் வந்தார்.

சேலம் அஸ்தம்பட்டி விருந்தினர் மாளிகையில், போராட்ட சமயத்தில் காவலாளர்களின் செயல்பாடுகளையும், இது தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் குறித்தும், கைது செய்யப்பட்டவர்கள் விவரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சம்பத், மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், துணை ஆணையர்கள் ஜோர்ஜி ஜார்ஜ், ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாணவர்களின் போராட்டத்தின்போது காவலாளர்கள் நடந்துகொண்ட விதம் குறித்தும், மாணவர்களுக்கு அரணாகவே செயல்பட்டதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்திய ஆட்சியர் அலுவலகம் எதிரேவுள்ள ரவுண்டானா, இரயில் சிறை பிடிக்கப்பட்ட பெரியார் மேம்பாலத்தின்கீழ் உள்ள தண்டவாள பகுதியிலும் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் ஆய்வுசெய்தார்.

அப்போது காவலாளர்களிடம் சில விவரங்களை கேட்டறிந்தார். அதற்கு துணை காவல் ஆணையர் ஜோர்ஜி ஜார்ஜ் விளக்கமளித்தார்.

ஆய்வின்போது சங்ககிரி உதவி ஆட்சியர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழ்ராஜன், தாசில்தார் லெனின் உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

சல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சேலத்தில் இரயில் சிறைபிடிக்கப்பட்ட இடம், ஆட்சியர் அலுவலக ரவுண்டானா ஆகிய இடங்களை பார்வையிட்டேன்.

அடுத்த கட்டமாக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்படும். அதற்கான தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும்.

அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். விசாரணையின்போது எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

சேலத்தில் இரயிலை சிறைபிடித்து சேதப்படுத்தியது தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் தேவைப்பட்டால் மட்டுமே விசாரணை மேற்கொள்வேன்.

சென்னையில் வாகனங்களுக்கு தீ வைப்பு, மீனவர் குப்பம் பகுதியில் ஏற்பட்ட கலவரம் குறித்தும் முழுமையான விசாரணை நடத்திய பின்னர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சேலத்தில் சிறைபிடிக்கப்பட்ட இரயிலின்மீது ஏறி போராடிய இளைஞர் ஒருவர், மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார்.

முழுமையான விசாரணைக்கு பின்னரே, அவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்குமா? என சொல்லமுடியும்.

அடுத்ததாக மதுரைக்கு சென்று ஆய்வுசெய்ய இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 24 December 2025: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் உறைபனி!
கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! டிசம்பர் 30-ம் தேதி விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா?